வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்


முன்னோடிப் பெண் இயற்பியலாளரான சியென்-சியுங் வூ, தனது இரண்டு ஆண் சகாக்களால் முன்மொழியப்பட்ட 'பீட்டா சிதைவு' (beta decay) தொடர்பான ஒரு கோட்பாட்டைச் சோதனை மூலம் உறுதிப்படுத்தினார். அவரது பணி அந்த இருவருக்கும் நோபல் பரிசு வெல்ல உதவியபோதிலும், சியென்-சியுங் வூ நோபல் குழுவால் அங்கீகரிக்கப்படவில்லை.

சியென்-சியுங் வூ,1912-ஆம் ஆண்டு சீனாவில் ஷாங்காய்க்கு அருகிலுள்ள லியு ஹோ என்ற ஊரில் பிறந்தார். கடைசி சீனப்பேரரசு வம்சமான மஞ்சு ஆட்சிக்கு எதிரான புரட்சியில் பங்கேற்பதற்கு முன்பு வரை பொறியாளராகப் பணியாற்றிய சியென்-ஷியுங் வூவின் தந்தை வூ சோங்யி, புரட்சிக்குப் பின் 1911-ஆம் ஆண்டு லியுஹேவில் பெண்களுக்கான ஒரு பள்ளியை நிறுவி நடத்தினார். சியென்-ஷியுங் வூ தனது ஒன்பது வயது வரை இந்தப் பள்ளியில் படித்தார். அவரது தாயார் ஃபான் ஃபுஹுவா ஒரு ஆசிரியை.
மேற்கத்திய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பயிற்சிக்காக சியென்-சியுங் வூ, சூச்சோ மகளிர் பள்ளிக்கு மாறினார். அங்கு வருகை தந்த அமெரிக்கப் பேராசிரியர்கள் ஆற்றிய விரிவுரைகள் மூலம் அவர் ஆங்கிலம் கற்றார். பாடத்திட்டத்தில் இல்லாத அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களையும் அவர் சுயமாகப் படித்தார். 1930-ஆம் ஆண்டு தனது வகுப்பில் முதல் மாணவியாகப் தேர்ச்சி பெற்றார்.

1930-ஆம் ஆண்டு முதல் 1934-ஆம் ஆண்டு வரை நாங்கிங்கில் உள்ள தேசிய மத்தியப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை இயற்பியல் பயின்ற சியென்-ஷியுங் வூ, அடுத்த இரண்டு ஆண்டுகள் பல்கலைக்கழக அளவில் ஊடுகதிர் படிகவியல் (X-ray crystallography) துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டதுடன், கற்பித்தல் பணியிலும் ஈடுபட்டார். அக்காலகட்டத்தில் சீனாவில் முதுகலை இயற்பியல் படிப்புகள் எதுவும் இல்லாத காரணத்தினால், அமெரிக்காவுக்குச் சென்று மேல்படிப்பைத் தொடருமாறு அவரது கல்வி வழிகாட்டி அவரை ஊக்குவித்தார்.
தனது பெற்றோரின் ஆதரவுடனும், மாமாவின் நிதியுதவியுடனும், சியன்-ஷியுங் வூ அமெரிக்காவில் கல்வி கற்பதற்காக சீனாவை விட்டு 1936-ஆம் ஆண்டு வெளியேறினார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சேரத் திட்டமிட்ட சியன்-ஷியுங் வூ, அங்குள்ள மாணவர் சங்கம் பெண்களை அனுமதிக்காத காரணத்தால் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். சைக்ளோட்ரானைக் கண்டுபிடித்தவரும், பின்னர் நோபல் பரிசு வென்றவருமான எர்னஸ்ட் லாரன்ஸுடன் அங்கு சியன்-ஷியுங் வூ கல்வி பயின்றார். பிற்காலத்தில் நோபல் பரிசு வென்ற எமிலியோ செக்ரேவுக்கு உதவியாளராக இருந்தார். பிற்காலத்தில் மன்ஹாட்டன் திட்டத்தின் தலைவரான ராபர்ட் ஓப்பன்ஹைமர் இயற்பியல் துறையில் பேராசிரியராக இருந்தார்.
1937-ஆம் ஆண்டு, சியென்-சியுங் வூ ஒரு ஆராய்ச்சி உதவித்தொகை பெற பரிந்துரைக்கப்பட்டார். இனப் பாகுபாடு காரணமாக அவருக்கு அது கிடைக்கவில்லை. நிதி தேவையை பூர்த்தி செய்வதற்காக தன்னுடன் பயின்ற எர்னஸ்ட் லாரன்ஸுக்கு ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் நிகழ்ந்த ஜப்பானின் சீனப் படையெடுப்பு, அவரது குடும்பத்துடனான தொடர்புகளைத் துண்டித்தது. இந்தப் படையெடுப்பைத் தொடர்ந்து, சியென்-ஷியுங் வூ தனது வாழ்நாள் முழுவதும் தனது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரைக்கூட மீண்டும் சந்திக்கவே இல்லை.
மதிப்புமிக்க 'ஃபை பீட்டா காப்பா' (Phi Beta Kappa) சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சியென்-ஷியுங் வூ, அணுக்கரு பிளவு குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, இயற்பியலில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். 1942-ஆம் ஆண்டு வரை அவர் பெர்க்லியில் ஓர் ஆராய்ச்சி உதவியாளராகத் தொடர்ந்து பணியாற்றினார். இக்காலகட்டத்தில், அணுக்கரு பிளவு குறித்து சியென்-ஷியுங் வூ மேற்கொண்ட ஆய்வுகள் குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைப் பெற்றன. இருப்பினும், ஆசியப் பெண்ணாக இருந்த காரணத்தினால், அவருக்குப் பேராசிரியர் பதவி வழங்கப்படவில்லை. அக்காலத்தில், அமெரிக்காவின் எந்தவொரு முக்கியப் பல்கலைக்கழகத்திலும் இயற்பியல் பாடங்களைப் போதிக்கும் பெண் பேராசிரியர்கள் இல்லை.
1942-ஆம் ஆண்டு, சியென்-ஷியுங் வூ, லூக் என்று அழைக்கப்பட்ட சியா லியு யுவானை மணந்தார். திருமணத்திற்கு பின் யுவான் நியூ, ஜெர்சியின் பிரின்ஸ்டனில் உள்ள ரேடார் கருவிகள் சம்பந்தப்பட்ட ஆர்.சி.ஏ நிறுவனத்திலும் சியென்-ஷியுங் வூ, ஸ்மித் கல்லூரியிலும் பணியில் சேர்ந்தனர். பணியில் சேர்ந்த ஓராண்டுக்கு பின், போர் காரணமாக ஆண் பணியாளர்களின் பற்றாக்குறை சியென்-ஷியுங் வூக்கு, கொலம்பியா, எம்.ஐ.டி மற்றும் பிரின்ஸ்டன் ஆகிய பல்கலைக்கழகங்களில் பணி புரியும் வாய்ப்புகளை வழங்கியது. ஆராய்ச்சிப் பணியை நாடிய அவருக்கு பிரின்ஸ்டனில் ஆராய்ச்சி அல்லாத ஒரு பணியையே ஏற்றுக்கொள்ளும் நிலை உருவானது. அங்கு, அவர் கடற்படை அதிகாரிகளுக்கு அணு இயற்பியலைக் கற்பித்தார்.

1944-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொலம்பியா பல்கலைக்கழகம் தங்கள் போர் ஆராய்ச்சித் துறையின் அணுகுண்டு உருவாக்கும் ரகசிய மன்ஹாட்டன் திட்டத்திற்கு சியென்-ஷியுங் வூயை தேர்ந்தெடுத்தது. அந்தத் திட்டத்திற்காக கதிர்வீச்சைக் கண்டறியும் கருவிகளை அவர் உருவாக்கினார். அணு யுகத்தின் தந்தை' என்று போற்றப்படும் என்ரிக்கோ ஃபெர்மியின் ஆராய்ச்சியில் ஏற்பட்ட ஒரு சிக்கலைத் தீர்க்க உதவிய சியென்-ஷியுங் வூ யுரேனியம் தாதுவைச் செறிவூட்டுவதற்கான ஒரு சிறந்த செயல்முறையைச் சாத்தியமாக்கினார்.
சியென்-ஷியுங் வூ தம்பதியினருக்கு சீனாவில் உள்ள தேசிய மத்திய பல்கலைக்கழகம் பணி வழங்கியபோதும் தொடர்ந்து நடைபெற்ற சீன உள்நாட்டுப் போரையும், அதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங்கின் வெற்றியையும் கருத்தில் கொண்டு, அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப வேண்டாம் என்று முடிவு செய்தனர். இந்தத் தருணத்தில் 1947-ஆம் ஆண்டு இவர்களுக்கு வின்சென்ட் வெய்-சென் என்ற மகன் பிறந்தார். பின்னாளில் இவர் ஒரு சிறந்த அணு இயற்பியலாளராக திகழ்ந்தார்.
ஆராய்ச்சி உதவியாளராக பணிபுரிந்து கொண்டிருந்த அதே கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1952-ஆம் ஆண்டு இணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பிற ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக இருந்த பீட்டா சிதைவை மையமாகக் கொண்டு இவரது ஆராய்ச்சி இருந்தது. 1954-ஆம் ஆண்டு, சியென்-சியுங் வூ மற்றும் சியா-லியு யுவான் ஆகியோர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றனர்.
1956-ஆம் ஆண்டு, சியென்-ஷியுங் வூ கொலம்பியாவைச் சேர்ந்த சுங்-டாவோ லீ மற்றும் பிரின்ஸ்டனைச் சேர்ந்த சென் நிங் யாங் ஆகிய இரண்டு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அந்த காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முப்பது ஆண்டுகள் பழமையான "சமச்சீர்மைக் கொள்கை" குறைபாடுடையது என்று நம்பிய அவர்கள், ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கினர். வலது மற்றும் இடது பக்க மூலக்கூறுகள் பொதுவாக சமச்சீராகச் செயல்பட்டாலும், "பலவீனமான விசை" சம்பந்தப்பட்ட அணுத்துகள் இடைவினைகளுக்கு இந்த சமச்சீர்மை பொருந்தாது என்று இவர்களின் புதிய கோட்பாடு கணித்தது.

லீ மற்றும் யாங்கின் கோட்பாட்டைச் சோதனை ரீதியாக உறுதி செய்வதற்காக, தேசிய தர நிர்ணயப் பணியகத்தில் உள்ள ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றிய சியென்-ஷியுங் வூ, 1957-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், கே-மீசான் துகள்கள் பழமையான சமச்சீர்மைக் கொள்கையை மீறுகின்றன என்று வெற்றிகரமாக நிரூபித்தார்.
சியன்-சியுங் வூவால் சோதனை ரீதியாக சரிபார்க்கப்பட்ட இந்த சமச்சீர்மைக் கோட்பாடு, அடுத்த ஆண்டே சுங்-டாவோ லீ மற்றும் சென் நிங் யாங்கிற்கு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. சியென்-ஷியுங் வூ தனது பணிக்காக நோபல் பரிசைப் பெறவில்லை என்றாலும், பரிசு பெற்றவர்களான லீ மற்றும் யாங், அவரது பங்களிப்புகளை அங்கீகரித்து, அவருடைய பணியின் மூலமாகவே தங்களுக்குப் பரிசு வழங்கப்பட்டதாகக் கூறினர்.

சியென்-சியுங் வூ 1958-ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தின் முழு நேர பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது. பீட்டா சிதைவு குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த சியன்-சியுங் வூ, ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் மற்றும் முர்ரே ஜெல்-மேன் ஆகியோரால் முன்மொழியப்பட்ட பீட்டா சிதைவு தொடர்பான ஒரு கோட்பாட்டை 1963-ஆம் ஆண்டு சோதனை மூலம் உறுதிப்படுத்தினார்.
1965-ஆம் ஆண்டு சியென்-சியுங் வூ எழுதி வெளியிட்ட 'பீட்டா சிதைவு' என்ற புத்தகம் அணு இயற்பியலின் தரமான பாட நூலாக அமைந்தது. 1972-ஆம் ஆண்டு அமெரிக்க கலை மற்றும் அறிவியல் கழகத்தின் உறுப்பினரான சியென்-சியுங் வூ கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நல்கை பேராசிரியராக (endowed professorship) நியமிக்கப்பட்டார்.
1976-ஆம் ஆண்டு அமெரிக்க இயற்பியல் சங்கத்தின் முதல் பெண் தலைவராகப் பணியாற்றினார். 1981-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பின்பும் தொடர்ந்து கற்பித்து வந்தார். சியென்-ஷியுங் வூ 1997 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியூயார்க் நகரில் காலமானார். அறிவியல் துறையில் நிலவும் கடுமையான பாலினப் பாகுபாட்டை ஒப்புக்கொண்ட சியென்-சியுங் வூ பாலினத் தடைகளின் தீவிர விமர்சகராகவும் திகழ்ந்தார்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatanMy vikatan
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
.png)






English (US) ·