சீனாவில் நிலச்சரிவு: மீட்புப் பணிகளில் வெடிகுண்டுகள்

20 hours ago 8

பெய்ஜிங்: தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமற்போனவர்களைத் தேட மீட்புக் குழுக்கள் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துகின்றன.

தொடர்மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மூன்று நாள்களாக 34 பேரைக் காணவில்லை. கனமான பாறைகளை உடைத்து காணாமற்போனவர்களைத் தேட மீட்புப் பணியாளர்கள் வெடிகுண்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.

நிலச்சரிவு அபாயம்

உலகில் நிலச்சரிவு அதிகம் ஏற்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக சீனா விளங்குகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 17) பெங்குய் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில் எட்டுப் பேர் உயிரிழந்தனர்.

பெங்குய், அதிக உயரமான கட்டடங்கள் உள்ள சோங்சிங் நகருக்குக் கிட்டத்தட்ட 270 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

திங்கட்கிழமை (ஜூலை 20) வெடிகுண்டுகளைக் கொண்டு பாறைகளைத் தகர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மிகப் பெரிய பாறை ஒன்று தகர்க்கப்பட்டது சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான சிசிடிவி தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது.

மீட்புப் பணிகள் மிகவும் முக்கியமான கட்டத்தில் இருப்பதாக சிசிடிவி தெரிவித்தது. ஆனால், உடனடியாக மேல்விவரங்கள் எதையும் அது தரவில்லை.

அதிபரின் வேண்டுகோள்

தேடல், மீட்புப் பணிகளை அறிவியல்ரீதியாக மேற்கொள்ளுமாறும் நிலச்சரிவுக்குப் பின்னால் உள்ள காரணத்தை அறிய துரிதமாக விசாரணை நடத்துமாறும் சீன அதிபர் ஸி ஜின்பிங் குரல் கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகளில் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 500,000 பேர் வாழும் பெங்குய் பகுதியில் நிலச்சரிவு காரணமாக அதிகாரிகள் 1,100 பேருக்கும் அதிகமானோரை வெளியேற்றிவிட்டனர்.

திங்கட்கிழமை வரை சீனாவின் பல மாநிலங்களில் தொடர்ந்து மழை பொழியும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. அதனால், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் மேலும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். நிலத்தடியில் நீர் அதிகம் உள்ள பகுதிகள், அதிகக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிகள் ஆகியவை அவற்றில் அடங்கும்.

யூனான், குவாங்சி, குவாங்டோங், அன்ஹுய், ‌ஷங்காய் ஆகியவற்றில் உள்ள எட்டு சிறிய, நடுத்தரப் பரப்பளவைக் கொண்ட ஆறுகளில் நீரின் அளவு, வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக சிசிடிவி திங்கட்கிழமை தெரிவித்தது.

Read Entire Article