தாய்லாந்துத் தேர்தல்: வெற்றிபெற்றதாக அனுட்டின் அறிவிப்பு

21 hours ago 14

ba99ca79-a18c-4c77-ad6b-dcac1fc07711

தாய்லாந்தின் இடைக்காலப் பிரதமரும் பும்ஜாய்தாய் கட்சித் தலைவருமான திரு அனுட்டின் சார்ன்விராக்குன் பேங்காக்கில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்துப் பொதுத் தேர்தலில் இடைக்காலப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குன் தலைமையிலான பழைமைவாத பும்ஜாய்தாய் கட்சி, வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்திருக்கிறது. வாக்குகள் தொடர்ந்து எண்ணப்படும் நிலையில் கட்சியின் அறிவிப்பு வெளிவந்தது.

தாய்லாந்து நாடாளுமன்றத்தில் மொத்தம் 500 இடங்கள் உள்ளன. 2023ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பும்ஜாய்தாய் கட்சிக்கு 71 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட முன்னுரைப்பின்படி, அக்கட்சி 177 இடங்களில் வென்றதாகக் கூறப்பட்டது. மக்கள் கட்சி, 81 இடங்களுடன் அடுத்த நிலையில் இருக்கிறது. பியூ தாய் கட்சி 62 இடங்களுடன் மூன்றாம் நிலையிலும் கிளா தாம் கட்சி 56 இடங்களுடன் நான்காம் நிலையிலும் உள்ளன. ஒன்பது இடங்களுடன் ஜனநாயகக் கட்சி ஐந்தாம் நிலையில் இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய திரு அனுட்டின், எதிர்பார்த்ததைவிட வாக்காளர்கள் கட்சிக்குக் கூடுதல் இடங்களைப் பெற்றுத் தந்திருப்பதாகச் சொன்னார்.

நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளைச் சமாளிக்கத் தமது கட்சியிடம் சரியான உறுப்பினர்கள் இருப்பதாக அவர் கூறினார்.

“தாய்லாந்து இப்போது நல்ல நிலையில் உள்ளது. மேலும் வலுவான அமைச்சரவையை அமைக்க நாங்கள் ஆவலுடன் இருக்கிறோம்,” என்றார் திரு அனுட்டின்.

முந்தைய தேர்தல்களில் மிகவும் முக்கியமானவர் என்று கருதப்பட்ட அவர், தாய்லாந்தின் 33வது பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 59 வயது அனுட்டினுக்குப் பல தரப்பினரின் ஆதரவு உள்ளது.

திரு அனுட்டினுக்கும் அவரின் பும்ஜாய்தாய் கட்சிக்கும் மூன்று அம்சங்கள் சாதகமாய் அமைந்திருக்கும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

கம்போடியாவுடன் எல்லைப் பூசல் ஏற்பட்டபோது அவர் எடுத்த வலுவான நிலைப்பாடு, கட்சிக்குள் அதிக எண்ணிக்கையில் தொழில்நுட்ப நிபுணர்களின் அறிமுகம், பொருளியல், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் நாடு எதிர்நோக்கும் சவால்களைச் சமாளிக்கத் திறமையான அமைச்சர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை வாக்காளர்களிடையே ஏற்படுத்திய அவரின் ஆற்றல் ஆகியவையே அந்த மூன்று அம்சங்கள்.

2023ஆம் ஆண்டில் ஆக அதிக இடங்களைக் கைப்பற்றிய மிதவாத மக்கள் கட்சி, இம்முறை குறைவான இடங்களையே வென்றது. அக்கட்சியின் தலைவர் நத்தாஃபோங் ரியூங்பன்யாவுட், தேர்தலில் வெற்றிபெறுவது சிரமம் என்பதை ஒப்புக்கொண்டார். மக்களின் தேர்வை ஏற்றுக்கொள்வதாக அவர் சொன்னார்.

Read Entire Article