“நாங்க ரெடி.. திமுக குழு அமைக்காதது வருத்தம்” – செல்வப்பெருந்தகை ஓப்பன் டாக்

1 hour ago 15

Last Updated:Feb 10, 2026 6:56 PM IST

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, “பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படவில்லை என்பதை அனைவரும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார். 

செல்வப்பெருந்தகை (கோப்புப் படம்)
செல்வப்பெருந்தகை (கோப்புப் படம்)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகிவருகின்றன. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அப்படியே தொடர்வதாக சொல்லப்பட்டுவந்தாலும், காங்கிரஸ் தரப்பில் இருந்து இருவேறு குரல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.

ஒரு தரப்பினர் திமுக கூட்டணியையும், ஒரு தரப்பு தவெக கூட்டணியையும் விரும்புவதுபோல் காங்கிரஸாரின் பேச்சுகள் இருந்துவருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணி, தொகுதி பங்கீடு விவகாரத்தை குறித்து பேச கிரிஷ் சோடங்கர் தலைமையில் தேசிய காங்கிரஸ் குழு ஒன்றை அமைத்துள்ளது.

இருந்தபோதிலும், இன்னும் திமுக தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என காங்கிரஸ் தரப்பில் இருந்து சொல்லப்பட்டுவருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று டெல்லியில், தேசிய காங்கிரஸ் தலைவரான மல்லிகா அர்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து வெளியேவந்த செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “காங்கிரஸிடம் எந்தக் குழப்பமும் இல்லை. இன்னும் தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படவில்லை என்றுதான் அனைவரும் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்கள்.

பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இறுதி நேரத்தில் பேச்சுவார்த்தை முடிந்து, வேட்பாளர்களைத் தேர்வு செய்து களத்திற்கு அனுப்பியதால் என்ன நடந்தது என்பதில் எங்களுக்கு நிறைய படிப்பினை இருக்கிறது.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், உடனடியாக பேச்சுவார்த்தை குழுவை அமைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் தலைவர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. விரைவாக பேச்சுவார்த்தை நிறைவு செய்து, தேர்தல் களத்திற்கு செய்ய வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.

நாளையே தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து எங்கள் தலைவர்கள் சொல்லியுள்ள கருத்தை அவரிடம் தெரிவிப்போம். ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, தேசிய தலைவர்களின் தமிழ்நாடு வருகை திட்டம் தயாராக இருக்கிறது. நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், பேச்சுவார்த்தை முடிந்து, தொகுதி பங்கீடு எல்லாம் முடிந்தால் தானே அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்துவரமுடியும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை கொருக்குபேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கு குழு அமைப்பது தொடர்பாக முதலமைச்சரே முடிவு எடுப்பார்” எனத் தெரிவித்தார்.

Read Entire Article