நாய் படும் பாடு!

3 hours ago 8

கி. சுப்பிரமணியம்

‘நாய் படும் பாடு பட்டேன்’ என்று விரக்தியால் சில மனிதர்கள் புலம்புவதைக் கேட்டிருக்கிறோம்.

ஆயினும் அந்த உவமையின் உண்மைப் பொருள், தெருவில் நிற்கும் அந்த வாய் பேசா நாய்களுக்கு மட்டுமே தெரியும்!

அப்படி நாய்ப்பிறவி எடுத்த கறுப்பனுக்கு அந்த துயரும் வலியும் நன்றாக தெரியும். அடர்த்தியான கறுப்பு மயிர் கொண்டிருந்ததால், வழிப்போக்கர்கள், கறுப்பு நாயென்றும், அதையே சிலர் கறுப்பன் என்ற பெயரிலும் அழைத்தனர்.

அந்தக் கறுப்பனின் மனம் பேசிய கதைதான் இது..

கறுப்பனுக்கே தன் பூர்வீகம் தெரியாது! அவன் என்ன பணம் படைத்தோர் வீட்டில் கொஞ்சப்படும் செல்லப் பிராணியாகவா பிறந்து வளர்ந்தான்!

தெருவோரத்தில் பிறந்து, குட்டியாய் விளையாடிய நாள்களே கொஞ்சம் நினைவில் இருந்தது.

அவன் மனதில் நின்ற மறக்கமுடியாத ஒரே காட்சி, தன்னைப் போன்ற தெரு நாய்களை பிடித்து எங்கோ ஏற்றிச் சென்றதைத்தான்.

தன் தாயும் பிடிபட்டாள்! அதுதான் கடைசியாக அவன் தாயின் முகம் கண்டது. அவன் கூடப் பிறந்த சகோதரனையும் காணவில்லை. அவனும் பிடிபட்டிருக்கக் கூடும்.

ஓடி ஒளிந்த இரு நாய்களில் கறுப்பனும் ஒருவன்.

பாவம்! குட்டி நாய்கள் என்ற கருணை உள்ளத்தால், விரட்டிப் பிடிக்காது விட்டனரோ என்னவோ!

விடுங்கள்! அது முடிந்த கதை!

பயத்தால் ஓடி மறைந்தபோது, கூடவே ஓடிவந்த மற்றொரு சாம்பல் நிற நாய் எங்கேயோ வேறு திசையில் தலைதெறிக்க ஓடியது!

இப்போது தனிமையில் விடப்பட்ட கறுப்பன், கால் போன போக்கில், எங்கெங்கோ நடந்து சென்றான்.

அப்பர் பாய லேபார் சாலையின் கிளை சாலைகளில், லோரோங் தை செங் என்ற சாலையும் ஒன்று. அது கம்பத்துச் சூழலில் அமைந்த இடம். வெகுதூரம் தப்பிப் பிழைத்துவந்த கறுப்பனுக்கு, அந்த இடம் கொஞ்சம் பாதுகாப்பான இடம்போல் தோன்றியது. அங்கு பல வீடுகள் இருந்தும், எந்த வீட்டுப்பக்கம் சென்றாலும், துரத்தும் மனிதர்களைத்தான் கறுப்பனால் எதிர்கொள்ள முடிந்தது. அங்கும் இங்குமாக கிடைத்த உணவு மிச்சங்களை குப்பைத் தொட்டிக்குள் கிளறி, கிடைத்ததை உண்ணுவான். சில சமயம் அப்படி அவன் உணவிற்காகக் கிளறுவதைக் கண்டு, சிலர் கல்வீசி அடித்துத் துரத்துவதையும் தாங்கிக்கொள்வான்.

யார் கண்ணிலும் படாத ஒரு ஒதுக்குப்புறத்தில் பசிக்களைப்புடன், கனத்த மழையிலும் நனைந்தபடி உறங்கிய நாள்கள் பல. அப்பொழுதெல்லாம் தன் தாய் பாசமுடன் தனக்கு பால் ஊட்டியதை நினைத்துப் பார்த்து ஏக்கம் கொள்வான். எங்கெங்கோ அலைந்து திரிந்து, கிடைத்த பழைய ரொட்டியை, தனக்கும் தன் சகோதரனுக்கும் பங்கு பிரித்து கொடுத்துவிட்டு, தான் உண்ணாது இருந்த தன் தாயை எண்ணும்போது, அந்த வாய்பேசா ஜீவனின் உள்ளம் பதைக்கும்.

இப்படியே ஓர் ஆண்டு பசிக்கொடுமையுடன் உயிர்வாழ்ந்தான் கறுப்பன்.

ஒரு நாள் மாலை, வழியில் கிடைத்த ஏதோ ஒரு காய்ந்த ரொட்டியை மகிழ்ச்சியுடன் கடித்துக்கொண்டிருக்கையில், பக்கத்துப் பூங்காவில் ஓர் அழகிய மேல்நாட்டு வகை நாயொன்றை நடக்கவைத்தபடி இரு இளம் பெண்கள் வந்தனர்

அடடா...! எத்தனை அலங்காரம் அந்த வெள்ளை நிற நாய்க்கு! அதன் மயிரை நன்றாக திருத்தி, அழகு சேர்த்துள்ளனர். கறுப்பனுக்கு தெரிந்தது அது ஒரு பெட்டை நாயென்று!

ஆகா..நாயாய்ப் பிறந்தால், இப்படியல்லவா பிறக்க வேண்டும்.

அந்தப் பெண்கள், அந்த நாயைத் தடவிக்கொடுத்து கொஞ்சினர். ஏதோ விலை உயர்ந்த பிஸ்கட்டை ஊட்டியும் விட்டனர்.

கறுப்பனின் வாய் ஊறியது!

படைப்பில், மனிதருக்கு மட்டுமா ஏற்றத்தாழ்வு!

நாய்களுக்குமுண்டு என்பதைக் காட்டியது அந்தக் காட்சி!

வெள்ளை நாய், அந்தப் பெண் மடியிலிருந்து குதித்து, கறுப்பனை நாடி ஓடியது. இனம் இனத்தைத் தேடி ஓடிவருவதில் என்ன அதிசயம்!

இதைக்கண்ட பெண்களில் ஒருத்தி, ஓடிச்சென்று அந்த வெள்ளை நாயைத் தூக்கியதோடு கறுப்பனையும் விரட்டினாள்.

ஆமாம் கறுப்பனின் அழுக்கு தன் சுத்தமான விலையுயர்ந்த நாய்மீது பட்டால் என்னாவது!

கறுப்பன் தீண்டப்படாதவனானான்!

துரத்தப்பட்ட கறுப்பன், அந்த அழகிய நாயை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு ஏக்கத்துடன் கால் போன போக்கில் நடந்தான்.

இப்படியே இந்த இடத்தில் இருந்தால் எதுவும் சாப்பிடக் கிடைக்காது என்ற எண்ணத்தில், தொடர்ந்து வேறு இடம் தேடி நடந்தான்

இரண்டு நாள் அலைந்து திரிந்து, உண்ண ஏதும் கிடைக்காததால், மிகவும் சோர்ந்த வண்ணம் தெருவோரமாக நடந்து, இன்டஸ்டிரியல் சாலை என்னும் பகுதியை அடைந்த கறுப்பனுக்கு வியப்பைத் தந்தது. அங்கு எல்லாமே தொழில் சார்ந்த உயர்மாடி, வணிக அலுவலகங்களாக இருந்தன.

இங்கே எப்படி கொஞ்சம் படுத்துக்கொள்ள இடமும் உண்ண உணவும் கிடைக்கப்போகிறது என்று எண்ணியபடியே மெல்ல பசிக் களைப்புடன் அக்கம் பக்கம் பார்த்தவண்ணம் நடந்தான்.

சற்றுத் தொலைவில் ஒரு கட்டடத்தின் வாயிலில், ஒரு சிறிய கூடு போன்ற அமைப்பும்,தென்பட்டது. அந்தக் கூட்டின் ஓரமாக அமர்ந்து, ஒரு பொட்டலத்தைப் பிரித்து, ஒருவர் உண்ணத் தொடங்கியதைக் கண்டான் கறுப்பன்

அந்தப் பக்கமாக மெல்ல நடந்துவந்த கறுப்பனுக்கு, அவர் உண்ணும், அந்த மீன் குழம்பின் வாசனை, மூக்கைத் துளைத்தது.

நடைபாதையில் நின்ற வண்ணம் ஏக்கத்துடன் பசியால் நடுங்கிய கால்களுடன் அவர் சாப்பிடுவதை ஏக்கத்துடன் பார்த்தபடி நின்றான் கறுப்பன்.

சாப்பிடுவதில் கவனம் செலுத்திய அந்த மனிதருக்கு, ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த கறுப்பனைக்கண்ணுக்குத் தெரியவில்லை!

அவருக்கும் நல்ல பசி போலும்!

பார்ப்பதற்குச் சற்றுக் குள்ளமாகவும், கறுத்த மேனியும் கொண்டவராகத் தென்பட்டார். அவர் அணிந்திருக்கும் வெள்ளை அரைக்கை, சட்டையும், நீலநிறக் காற்சட்டையையும் வைத்தே, அவர் அந்த நிறுவனத்தின் வாயிற் காவலர் என்பதைக் காட்டியது.

முக்கால் வாசி தின்றவர், தாகம் தீர்க்க தண்ணீர் பாட்டிலைக் குனிந்து எடுத்த பொழுதுதான், கறுப்பன் பஞ்சடைந்த கண்களுடன் நின்ற காட்சியை அவரால் காண முடிந்தது.

ஆரம்பத்தில் சாதாரணமாக கறுப்பனைப் பார்த்த வண்ணம் தொடர்ந்து சாப்பிடத் தொடங்கியபோது, தன்னைப் பார்த்து, சற்று வாலாட்டியபடி கொஞ்சம் அழுவதுபோல் குழைந்த ஒரு ஈன ஒலியை மெல்ல கறுப்பன் எழுப்பியபோதுதான் அதை உற்றுக் கவனித்தார் அந்த மனிதர்.

இதைவிட தன் பசிப்பிணியை எடுத்துக்காட்ட கறுப்பனுக்கு வேறு வழி தெரியவில்லை!

கறுப்பன் என்ன மனித இனமா, வாய் திறந்து அம்மா தாயே, பசிக்கிது. கொஞ்சம் பிச்சை போடுங்கள் என கேட்க!

இப்போது கறுப்பனின் வாடிய நிலையைப் புரிந்துகொண்டார் ரவி.

ஆம். அதுதான் அவரின் பெயர்!

அந்த மனிதரின் மனத்தில் இரக்கம் பிறந்தது.

கடைசியாக மிச்சம் இருந்த உணவை இலையோடு சேர்த்து, அந்தக் கூடாரத்தின் வெளிப்புறப் பகுதியில் வைத்து, கறுப்பனைக் சைகையாலும், ‘வா, வா’ என்றும் கூப்பிட, மிகவும் தயக்கத்துடன் வந்த கறுப்பன், அந்த மிச்சமிருந்த உணவை, ஒரு பருக்கைகூட விடாது எல்லாவற்றையும் உண்டு முடித்துவிட்டு, நன்றி தேங்கிய கண்களுடன் ரவியை மெல்நோக்கிப் பார்த்தான்!

நல்லவேளையாக, அங்கு கிடைத்த பழைய கிண்ணமொன்றில், அவர் குடித்த தண்ணீரின், மிச்சத்தை, அதில் ஊற்றவே, தாகம் தீர எல்லாவற்றையும் குடித்தான் கறுப்பன்.

உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்பது போல், அங்கேயே சாய்ந்து, சற்று களைப்பாறினான்!

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ரவிக்கு சிரிப்பு வந்தது.

‘உண்ண உணவு கொடுத்தா இங்கேயே படுத்திட்டியே’ என்று சொல்லி, மெல்ல நகைத்தார். அவர் சொன்னது கறுப்பனுக்குப் புரிந்ததோ இல்லையோ, வாலை மெல்ல அசைத்து தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டான்.

ஏதோ விட்டகுறை தொட்ட குறை என்பார்களே அதுபோல், ஏதோ ஒரு பாசவுணர்வு ஏற்பட்டது கறுப்பன் மீது ரவிக்கு. அது இரக்கத்தின் காரணமாகக்கூட இருக்கலாம்.

அவரோ குறைவான ஊதியம் பெற்று தன்னந்தனியாக வாழும் அறுபது வயதைச் சற்று தாண்டியவர். இப்படிப்பட்ட எளிமையான மக்களிடம்தான் இரக்கத்தின் ஈரப்பசை கொஞ்சம் ஒட்டியிருக்கும் போலும்!

ரவியின் உள்ளன்பைப் புரிந்துகொண்ட கறுப்பன் அங்கேயே கூடாரத்தின் சுவர் ஓரமாக தன் இருப்பிடத்தைத் தானாகவே உறுதிசெய்துகொண்டான்.

அங்கு இரண்டு ஷிஃப்ட் வேலையென்பதால், மாலையில் ஒருவர் ரவிக்கு மாற்றாக வேலைக்கு வந்தவர் நாயைக்கண்டு திகைத்தார்.

ரவி அந்த சக ஊழியர் மணியின் கையைப்பிடித்து ஏதோ சமாதானம் சொல்லி, கறுப்பன் அங்கு இருக்குமாறு கேட்டுக்கொண்டார். அவரும், ரவியின்மீது கொண்ட நட்பால் அரைமனதாக ஏற்றுக்கொண்டார். கறுப்பனும் மணியைப் பார்த்து வால் ஆட்டினான். அதை பார்த்த மணிக்கும் கொஞ்சம் இரக்கம் பிறந்தது.

இரவின் போது அந்தப் பெரிய கட்டடத்தை, பாதுகாப்புக் கருதி, இரண்டு முறை சுற்றிவரவேண்டும் என்பது வகுக்கப்பட்ட விதி. ஆகவே இரவு 12 மணியளவில், கையில் டார்ச்லைட் ஏந்திய வண்ணம் மணி கிளம்பியபோது, அழைக்காமலே, கறுப்பனும் கூடவே சேர்ந்து சுற்றி வந்ததைக்கண்டு ஆச்சரியப்பட்டார்.

மறுநாள் காலை ரவி வேலைக்கு வந்தபோது, கறுப்பனின் இந்தச் செய்கையைச் சொல்லி ரவியையும் ஆச்சரியப்பட வைத்தார் மணி.

கறுப்பன் இங்கு காவலர்கள் வேலை செய்யும் கூடாரத்தில் தங்கியிருப்பதைக் கண்ட மேலதிகாரி, இதைக் கண்டிக்க முற்பட்டார்.

பல காலம் இங்கு உழைத்த காரணத்தால், அந்த அதிகாரியிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்தார் ரவி. ஆகவே மேலதிகாரியை நேராக சந்தித்து, சிறிது காலம் கறுப்பன் இங்கு காவலுக்குத் துணையாக இருக்க அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் கறுப்பன் இரவில் காவலர்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடும்போது கறுப்பனும் துணையாக வருவதை எடுத்துச் சொல்லவும், அவர் மனமிரங்கி சிறிது காலம் கறுப்பன் தங்கியிருக்க அனுமதி தந்தார்.

ரவிக்கு இது மகிழ்வைத் தந்தது.

அடுத்தநாள் வேலைக்கு வரும்போது, ஒரு சிறு சோப்புத் துண்டை எடுத்து வந்தவர், அங்கிருந்த குளியல் அறையில், கறுப்பனை நன்றாகக் குளிப்பாட்டி சுத்தமாக்கினார்.

ஒரு மனிதரின் கையால் இப்படி அன்புகாட்டி குளிப்பாட்டி விடப்பட்டது புதுமையாகவும் மனத்திற்கு இதமாகவும் இருந்தது கறுப்பனுக்கு. எல்லோராலும் விரட்டப்பட்டும் கல்லடிபட்டும் வந்தவனுக்கு, இப்போது மனிதர்களிலும் நல்லவர்கள் உள்ளனர் என்று தோன்றச்செய்தது!

ரவியின்மீது, கறுப்பனுக்கு பாசப்பிணைப்பு அதிகரித்தது.

சில நேரத்தில், கறுப்பன் சிறிது நேரம் வெளியில் உலாவச் சென்றுவிடுவான்.

மதிய உணவருந்தும் வேளையில், ஊழியர்கள், அங்கு அருகில் இருக்கும் அப்பர் பாய லேபார் இருவழிச் சாலையை வேகமாகக் கடந்து, எதிரில் இருக்கும் உணவகக் கடைகளுக்குச் செல்வர். அங்கும் மேம்பாலம் இருந்தும், சோம்பலின் காரணத்தால், ஆபத்தான முறையில், கண்மூடித்தனமாக சாலையை தாண்டும் பழக்கத்தை அவர்கள் கைவிடவில்லை.

ஆனால் கறுப்பனோ, மிக நிதானமாக இந்த மேம்பாலத்தைப் பயன்படுத்திச் சாலையை கடப்பான்.

அதைக் கவனித்த ஊழியர்கள் மிகவும் வியப்புடன் கறுப்பனைப் பார்த்தனர்!

இந்தக் கறுப்பனின் பொறுப்பான நடவடிக்கை பற்றி எல்லோரும் பேசிக்கொண்டனர். ரவி காதிற்கு இது எட்டியபோது மிகவும் பெருமைப்பட்டார்.

ஒருநாள், கறுப்பன் தான் இருக்கும் இடத்தைத் தாண்டி சில கட்டடங்களைக் கடந்து சென்று பார்த்தான். அங்கே ஒரு சிறிய உணவருந்தும் கடை இருந்தது. அதில் சில நாய்கள் ஒன்றாக இருப்பது தெரிந்தது. அதன் அருகே கறுப்பன் சென்றபோது, ஒரு சாம்பல் நிற நாயொன்று கறுப்பனை நோக்கி உறுமிக்கொண்டே நெருங்கியது. மனிதர்களுக்கு எல்லைப் பிரச்சினை இருப்பதுபோல் ஏனைய மிருக இனத்திற்கும் உண்டு. ஆகவே, தன் எல்லையைக் காத்துக்கொள்ளும் நோக்கத்தோடு பாய்ந்துவந்த அந்த நாய், கறுப்பனை வாசம் பிடித்து அப்படியே நின்றுவிட்டது.

ஆம் ஓராண்டிற்கு முன்னர் நாய் பிடிப்பவர்களிடமிருந்து கறுப்பன் தப்பியோடியபோது சேர்ந்து ஓடி தப்பிய சாம்பல் நிற நாய்தான் இது என்பதை இருவரும் மோப்பம்பிடித்து புரிந்துகொண்டபோதும், சாம்பல் நாய் மேலும் உறுமிக்கொண்டே இருந்ததால், கறுப்பன் மெல்ல பின்வாங்கிச் சென்றான்.

அந்தச் சாம்பல் நிற நாய் கறுப்பனைவிடக் கொஞ்சம் பெரியதாகவும் இருந்தது. கழுத்தில் ஒரு லைசன்ஸ் பட்டை தொங்கிக்கொண்டிருந்தது.

தெரிந்த பழைய நாயானாலும், தனக்கு உணவு கிடைக்கும் கடையின் எல்லையைக் காப்பதில் கவனமாக இருந்தது அந்தச் சாம்பல் நிற நாய்.

அந்த நாயின் கழுத்தில் தொங்கிய பட்டையைப்போல் தன் கழுத்திலும் தொங்கினால் அழகாக இருக்கும் என நினைத்துக்கொண்டு கறுப்பன் தன் தங்கும் இடம்நோக்கி நடந்தான்.

அந்தப் பட்டை எவ்வளவு பெரிய பாதுகாப்பு என்பது கறுப்பனுக்குத் தெரியுமா என்ன!

இப்படியே கிட்டத்தட்ட மேலும் ஓர் ஆண்டு ஓடி மறைந்தது.

இப்பொழுதெல்லாம் கறுப்பன் அங்கிருப்பதைப் பற்றி, அந்த நிர்வாக தலைவர் ஏதும் அதிகம் சொல்வதில்லை. ஆயினும், ரவியிடம், கறுப்பனுக்கு விரைவாக லைசன்ஸ் எடுக்கும்படி ஒருமுறை சொன்னார்..

அவர் சொன்னது, கறுப்பன் இங்கு நிரந்தரமாக இருக்க, மறைமுகமாகக் கொடுத்த அங்கீகாரமாக மகிழ்வுடன் எடுத்துக்கொண்ட ரவி, எப்படியும் விரைவில் கறுப்பனுக்கு லைசன்ஸ் எடுத்துவிடவேண்டும் என்று மனத்தில் பதியவைத்துக்கொண்டார்.

இரண்டு வாரங்கள் ஓடி மறைந்தன.

லைசன்ஸ் பெறுவதற்கு அடுத்த வாரம் போகலாம் என்று திட்டமிட்டுக்கொண்டார் ரவி.

அப்படியிருக்க, சில நாட்களாக ரவி ஏனோ சோர்வாகக் காணப்பட்டார். அன்று மாலை, தன் ஷிஃப்ட் முடிந்தவுடன், நெஞ்சு சற்று விட்டுவிட்டு வலிப்பதாக மணியிடம் கூறியவர், கறுப்பனைத் தடவிக்கொடுத்துவிட்டு மெல்ல கிளம்ப, வழக்கத்திற்கு மாறாக கறுப்பன் அவரைப் பின்தொடர்ந்து சாலைவரை வந்து விட்டுச்சென்றான்.

மனித மனத்திற்குப் புலப்படாத சில விஷயங்கள், மிருக இனங்களுக்கு புரியும் போல் தோன்றுகிறது.

அடுத்த நாள் காலை ரவி வேலைக்கு வரவில்லை.

மதியத்திற்குள் அந்த துயரச்செய்தி, அங்குள்ள ஊழியர் வட்டாரத்தில் பரவியது

நேற்று வீடு சென்றடைந்த ரவி, மாரடைப்பால் காலமானார் என்பதுதான் அந்தத் துயரச் செய்தி.

கறுப்பன் தன் உள்ளுணர்வால் அதைப் புரிந்துகொண்டானோ என்னவோ,

தெருவைப் பார்த்தவண்ணம், இரண்டு நாள் சுருண்டு படுத்தே கிடந்தான்.

இப்பொழுது ரவிக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமித்தது நிறுவனம்.

மணி ஏதேனும் கிடைத்த உணவைக் கறுப்பனுக்கு அவ்வப்போது போடுவார்.

அது சிலசமயம் போதுமானதாக இருப்பதில்லை.

சில நாட்கள் சென்றபின், தலைமை அதிகாரிக்குச் சிக்கல் ஏற்பட்டது. கறுப்பனின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்ட ரவியோ காலமாகிவிட்டார். இப்பொழுது பணியில் இருக்கும் மற்ற காவலர்கள் இருவரையும் கறுப்பனை இங்கு வைத்துப் பராமரிக்கச் சொல்வது முறையல்ல என்பதையும் உணர்ந்தார்.

ஆகவே கறுப்பனை என்ன செய்வது என்று குழம்பிப் போயிருந்தார். இந்தச் சூழலை கறுப்பனால் உணர முடிந்தது. தன்னைப் பாசத்தோடு கவனித்துக்கொண்ட ரவி இல்லாத இடத்தில் தனக்கும் இருக்க விருப்பமில்லாது, ஒரு நண்பகல் அங்கிருந்து கிளம்பி, மீண்டும் கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்த போது, திடீரென எங்கிருந்தோ ஒரு பெரிய வாகனமொன்று கறுப்பனுக்குப் பின் வந்து நின்றவுடன், அதிலிருந்து வலையொன்றை வீசி, கறுப்பனைக் கைப்பற்றி, வாகனத்திற்குள் தூக்கிப்போட்டனர்.

அதிர்ச்சியில் உறைந்துபோனான் கறுப்பன்.

அவனுக்கு எல்லாம் புரிந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் தன் தாய்க்கு ஏற்பட்ட கதி இப்பொழுது தனக்கும் ஏற்பட்டுள்ளதென்று.

பிடிபட்ட மற்ற நாய்கள் அங்கும் இங்குமாகக் குதித்து குரைத்துக்கொண்டிருக்கையில், கறுப்பன் அமைதியாகவே இருந்தான்.

தன்னையும் சில காலம் ஒரு உயிராக மதித்து, இரக்கம் காட்டி, உணவளித்து, பாசத்தைக் காட்டிய ரவியை நினைத்து பெருமூச்சு விட்டான்.

வாகனம். அந்த இடத்தைவிட்டு எங்கேயோ சென்றுகொண்டிருந்தது.

முற்றும்

Read Entire Article