Last Updated:Jul 22, 2026 2:55 PM IST
நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து அவையில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என திமுக எம்.பி. வில்சன் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.

நீட் தேர்வு குறித்து போராட்டங்கள் டெல்லியில் நடந்துவரும் நிலையில், இது குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்திவருகிறது. இந்நிலையில், இதேபோல், அவையில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை எம்.பி. வில்சன் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
அந்த நோட்டீஸில் தெரிவித்ததாவது; “நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 மற்றும் தேசிய பல் மருத்துவ ஆணையச் சட்டம் 2023 ஆகியவற்றில் அவசரத் திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தியும் நாடு முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்த மிக முக்கியமான பொதுப் பிரச்சனை பற்றி விவாதிக்க, 22 ஜூலை 2026 அன்றைய அவையின் பட்டியலிடப்பட்ட அலுவல்களை நிறுத்தி வைக்க வேண்டும். மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் நீட் தேர்வு ஒரு நியாயமான மற்றும் சமமான அமைப்பை வழங்கத் தவறிவிட்டது என்பதை தொடர் போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன.
நீட் என்பது கொடூரமான தேர்வு முறையாக மாறியுள்ளது. இது பயிற்றுவிக்கும் (coaching-driven) மையங்களை சார்ந்த ஒரு தேர்வாக மாறியுள்ளது. இதில் வெற்றி என்பது உண்மையான திறமையை விட விலையுயர்ந்த தனியார் பயிற்சி மையங்களை அணுகுவதையே பொறுத்துள்ளது. இது மாநில வாரியங்கள், அரசுப் பள்ளிகள், கிராமப்புறப் பின்னணிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதன் மூலம் சமத்துவம், சமூக நீதி மற்றும் சம வாய்ப்பு ஆகிய அரசியலமைப்புத் கொள்கைகளை வீழ்த்தியுள்ளது.
வினாத்தாள் கசிவு, திட்டமிடப்பட்ட தேர்வு முறைகேடுகள், ஆள்மாறாட்டம் மற்றும் பிற குளறுபடிகள் தொடர்ந்து நடப்பதன் மூலம் நீட் தேர்வின் நம்பகத்தன்மை மீண்டும் மீண்டும் சீர்குலைந்துள்ளது. இந்தத் தொடர் தோல்விகள் லட்சக்கணக்கான மாணவர்களது மற்றும் பெற்றோர்களின் நம்பிக்கையை உடைத்துள்ளன. இத்தகைய தொடர் குளறுபடிகளால் சூழப்பட்ட ஒரு தேர்வு முறை, நாட்டில் மருத்துவராக விரும்பும் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதை இனி தொடர அனுமதிக்க முடியாது.
கல்வி என்பது அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் (Concurrent List) வருகிறது. நாடாளுமன்றம் உயர்கல்விக்கான தரநிலைகளை நிர்ணயிக்க முடியும் என்றாலும், சேர்க்கை மற்றும் கல்வி நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு. தற்போதைய சட்டக் கட்டமைப்பு சேர்க்கை முறையை நியாயமற்ற முறையில் ஒன்றிய மயமாக்கியுள்ளது, கூட்டாட்சி அமைப்பைச் சீர்குலைத்துள்ளது மற்றும் மாநிலங்களின் சொந்தக் கல்வித் தேவைகள் மற்றும் சமூக நிலவரங்களுக்கு ஏற்ப சேர்க்கை முறைகளை உருவாக்கும் நெகிழ்வுத்தன்மையை மாநிலங்களிடமிருந்து பறித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019 மற்றும் தேசிய பல் மருத்துவ ஆணையச் சட்டம், 2023 ஆகியவற்றைத் திருத்துவதும், நீட் தேர்வை ரத்து செய்து, கல்வித் தரத்தைப் பராமரிக்கும் அதே வேளையில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ நிறுவன சேர்க்கைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு மீண்டும் வழங்குவதும் அத்தியாவசியமாகி உள்ளது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டங்கள், தொடர்ச்சியான தேர்வு முறைகேடுகள், தேர்வு முறையின் மீதான பொது நம்பிக்கை இழப்பு, கூட்டாட்சித் தத்துவம், சமூக நீதி மற்றும் கல்விக்கான உரிமை ஆகியவற்றின் மீதான தொலைநோக்கு பாதிப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, விதி 267-ன் கீழ் அவையின் அலுவல்களை உடனடியாக நிறுத்தி வைத்து, இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019 மற்றும் தேசிய பல் மருத்துவ ஆணையச் சட்டம் 2023 ஆகியவற்றில் தகுந்த திருத்தங்களைச் செய்து நீட் தேர்வை ரத்து செய்ய அரசாங்கத்தை அவை வலியுறுத்த வேண்டும்” என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DECODE | ஸ்பெயின் சாம்பியன் ஆன உண்மை காரணம்? மெஸ்ஸியையே முடக்கிய மாஸ்டர் பிளான்!
அர்ஜென்டினாவின் பலத்த தற்காப்பு அரணை உடைத்து நொறுக்கி உள்ளனர் ஸ்பெயின் வீரர்கள்
ஸ்பெயின் கால்பந்தின் பாரம்பரிய அடையாளமான டிக்கி-டகா உத்திதான் இதற்கு உதவியுள்ளது
அந்த உத்தி என்ன என்ற முழு விவரத்தை, இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்...
.png)








English (US) ·