இணையத் தாக்குதல்கள் பிரிட்டனின் தொழில்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
லண்டன்: பிரிட்டனில் இணையத் தாக்குதல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. சட்டவிரோதக் கும்பல்கள், அமைப்புகள், எதிரி நாடுகள் ஆகியவை இணையத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
ஜாகூவார் லேண்ட் ரோவர், மார்க் அண்ட் ஸ்பென்சர் குழுமம் உள்ளிட்ட மிகப்பெரும் நிறுவனங்கள்மீதும் இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
2024 ஆகஸ்ட் மாதம் முதல் 2025 ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் 429 இணையத் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகப் பிரிட்டனின் தேசிய இணையப் பாதுகாப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
429 இணையத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட பாதி தாக்குதல்கள் தேசியக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட சதி முயற்சி என்று அதிகாரிகள் கூறினர்.
அதாவது வாரத்திற்கு நான்கு முறை தேசிய அளவில் ஏதேனும் இணையத் தாக்குதல்கள் நடத்தப்படுகிகின்றன.
பிரிட்டனின் பொருளியல் நடவடிக்கையை முடக்க வைப்பது, அத்தியாவசியச் சேவைகளில் இடையூறு, மத்திய அரசாங்கத்தின் கட்டமைப்பை பாதிக்கவைப்பது என 18 இணையத் தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இவ்வாண்டுத் தரவுகளுடன் அதற்கு முந்தைய ஆண்டுத் தரவுகளை ஒப்பிடுகையில் தற்போது இணையத் தாக்குதல்கள் 50 விழுக்காடு அதிகரித்துள்ளன.
இணையத் தாக்குதல்கள் பிரிட்டனின் தொழில்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளயுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
“கடந்த சில மாதங்களாகப் பல முன்னணி நிறுவனங்களும் பிரபலமான நிறுவனங்களும் இணையத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளியல், உற்பத்தி, போக்குவரத்து எனப் பல துறைகள் பாதிக்கப்பட்டன,” என்று தேசிய இணையப் பாதுகாப்பு நிலையம் தெரிவித்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜாகூவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் இணையக் கட்டமைப்பு முடக்கப்பட்டது. இதனால் உலகில் உள்ள அதன் தயாரிப்பு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டன.
இச்சம்பவத்தால் அந்நிறுவனத்திற்குப் பல மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. தொடர்புச் சங்கிலி முதல் ஆட்குறைப்பு வரை பிரச்சினை பெரிதானது. அதன்பின்னர் பிரிட்டன் அரசாங்கம் பிரச்சினையைத் தீர்த்துவைத்தது.
விமான நிறுவனங்கள்மீதும் இணையத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதனால் ஐரோப்பாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் விமானங்கள் தாமதம் ஆகின்றன அல்லது ரத்து செய்யப்படுகின்றன.