புதிய தொழில்நுட்பம் – கைகளைப் பயன்படுத்தாமல் நினைத்தாலே இயங்கும் கணினி, கைப்பேசி! உடல் உறுப்பு செயலிழந்தவர்களுக்கு பெரும் வாய்ப்பு!

1 hour ago 15

சென்னை, பிப்.16-கை, கால்கள் அசைக்க முடியாத ஒரு நபர், கணினியையோ அல்லது கைப்பேசியையோ தொடாமலேயே, வெறும் நினைப்பாலேயே இயக்கினால் எப்படி இருக்கும்? இது ஏதோ சினிமா கதை அல்ல. உலக நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், நிஜமாக்கி வரும் ‘நியூராலிங்க்’ எனும் நவீன தொழில்நுட்பம் தான் இது.

மனித மூளையில் மிகச்சிறிய, அதாவது ஒரு நாணயத்தின் அளவே உள்ள ஒரு எலக்ட்ரானிக் சிப்பை அறுவை சிகிச்சை மூலம் பொருத்துவது தான் இந்த திட்டம். இந்த சிப்பில் இருந்து மயிர் இழையை விட மெல்லிய இழைகள் மூளையின் திசுக்களுக்குள் செல்லும். நாம் எதையாவது செய்ய நினைக்கும்போது மூளையில் உருவாகும் மின் அலைகளை இந்த சிப் பிடித்து, அதை ‘புளூடூத்’ மூலம் கணினிக்கு அனுப்பும்.

கணினி விளையாட்டு

இந்த திட்டம் 2016ஆம் ஆண்டு எலான் மஸ்க்கால் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகள் குரங்கு மற்றும் பன்றி ஆகிய விலங்குகளிடம் சோதனை செய்த பிறகு, 2024ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி முதல் முறையாக ஒருவருக்கு இந்த சிப் பொருத்தப்பட் டது. அவரது பெயர், நோலண்ட் அர்பாக். இவருக்கு இப்போது 31 வயது ஆகிறது.

8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கியதால், நோலண்ட் அர்பாக்கின் கழுத்துக்கு கீழே உடல் உறுப்புகள் செயலிழந்து போயின. அவரால் கை, கால்களை அசைக்க முடியாது. ஆனால் இந்த சிப்பொருத்தப்பட்ட சில வாரங்களிலேயே, அவர் தனது மனதாலேயே கணினி திரையில் உள்ள கர்சரை நகர்த்தி ஆச்சரியப்படுத்தினார்.

அவர் சிப் மூலம் முதன்முதலில் செய்த காரியம், இரவு முழுவதும் தூங்காமல் ‘சிவி லைசேஷன் 6′ என்ற கணினி விளையாட்டை விளையாடியது தான்.

அதன் தொடர்ச்சியாக, அதே 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் இறுதியில் அலெக்ஸ் என்பவருக்கு இந்த சிப் பொருத்தப்பட்டது. அவருக்கும் முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கழுத்துக்கு கீழே உறுப்புகள் செயலிழந்தன.

இவர் சிப் பொருத்தப்பட்ட 2ஆவது நாளிலேயே, தனது நினைவாற்றல் மூலம் கணினி திரையில் உள்ள குறியீட்டை (கர்சர்) நகர்த்த தொடங்கினார். அலெக்ஸ் ஒரு தீவிரமான காணொலி கேம் பிரியர்.

சிப் பொருத்தப்பட்ட பிறகு, அவர் ‘கவுண்ட்டர்-ஸ்டிரைக் 2’ போன்ற வேகமான விளையாட்டுகளை மிக துல்லியமாக விளையாடினார். தற்போது அவர், 3டி டிசைனிங் மென் பொருளை பயன்படுத்தி பொருட்களை வடிவமைக்கும் அளவுக்கு முன்னேற்றம் பெற்று விட்டார்.

மறுவாழ்வுத் திட்டம்

இந்த 2 பேரின் வெற்றியை தொடர்ந்து, 21 பேருக்கு சிப் பொருத்தப்பட்டு இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். மேலும், இந்தாண்டு இறுதிக்குள் 1,000 பேருக்கு சிப் பொருத்தும் திட்டத்தையும் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது உடலால் முடியாதவர்களுக்கு ‘மறுவாழ்வு’ அளிக்கும் திட்டமாகும். இந்த சிப் பொருத்துவதன் மூலம் பக்கவாதத்தால் கை, கால்கள் செயலிழந்தவர்கள் மற்றவர்களின் உதவியின்றி போன் பேசலாம், மெசேஜ் அனுப்பலாம். கண் தெரியாதவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க செய்யும் ஆய்வுகளும் இதில் நடக்கின்றன. ஞாபக மறதி நோயான அல்சைமர் போன்ற மூளை தொடர்பான நோய்களை குணப்படுத்தவும் இது உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதுவரை இந்த சிப் பொருத்தப்பட்டுள்ள அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் சாதாரண மனிதர்களை விட வேகமாக கணினியில் காணொலி கேம் விளையாடுவது, படம் வரைவது போன்ற காரியங்களை செய்கிறார்கள். இந்த சிப்பை பொருத்த பெரிய ஆபரேசன் தேவையில்லை.

தையல் எந்திரம் போல செயல்படும் ரோபோ, மனித தலையில் துல்லியமாக இந்த சிப்பை பொருத்தி விடுகிறது. இந்த திட்டம் மூலம், ஒருவர் எதிர்காலத்தில் பேசாமல் இருந்தால் கூட அவர் நினைப்பதை இன்னொருவர் புரிந்து கொள்ளும் வசதி வரும்.

புத்தகங்களை படிக்காமலே, அந்த புத்தகம் தொடர்பாக இணையதளத்தில் இருக்கும் தகவல்களை நேரடியாக மூளைக்கே பதிவிறக்கம் செய்யும் அளவுக்கு தொழில் நுட்பம் வளரலாம் என்று கூறுகின்றனர்.

Read Entire Article