புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால் அது உயிர்க்கொல்லி நோய். அது உயிரைப் பறித்துவிடும் என்று அனைவரும் அச்சப்பட்டனர். ஆனால், நவீன மருத்துவ முன்னேற்றம் காரணமாக புற்று நோயால் பிழைத்து உயிர் வாழ்வோர் விகிதம் அண்மையில் அதிகரித்துள்ளது.
கேள்வி: புற்று நோயாளிகளுக்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சை முறை பற்றி?
பதில்: முன்பெல்லாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மருத்துவப் பயனாளிக்கு, புற்றுநோய் பாதித்த உறுப்புகளை அப்புறப்படுத்த வேண்டிய நிலை இருந்தது. உதாரணமாக மார்பகப் புற்று நோயால் பாதித்த ஒரு பெண்ணின் மார்பகம் அப்புறப்படுத்தப்பட்டது. அதைப்போல காலில் புற்றுநோய் இருந்தால் காலையே அகற்ற வேண்டியது இருந்தது.
மார்பகக் கட்டி
ஆனால், தற்போது அதற்கு அவசியம் இல்லை. மார்பகத்தில் கட்டி இருந்தால் அதை மட்டும் அப்புறப்படுத்தி முழு உறுப்புகளைப் பாதுகாக்க முடியும். இது போல் பல உறுப்புகளை நாம் கட்டியை மட்டும் அகற்றி விட்டு பாதுகாக்க முடியும். முன்பெல்லாம் அறுவை சிகிச்சை (Open Surgery) செய்து கொண்ட பின்பு பல நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறும் சூழல் இருந்தது. தற்போது ‘லேப்ரோஸ்கோபி’ மூலம் அறுவை சிகிச்சை செய்யும்போது அறுவை சிகிச்சை செய்து கொண்ட தினமே கூட வீட்டுக்குத் திரும்பி விடலாம். மேலும், அறுவை சிசிக்சை செய்வதால் ஏற்படும் தழும்பு கூட இல்லாமல் செய்து விடலாம்.
பொதுவாக, அறுவை சிகிச்சை செய்யும்போது மருத்துவர்கள் மருத்துவப் பயனாளியின் உயிரைக் காப்பாற்றுவதிலேயே அதிக கவனம் செலுத்துவார்கள். அந்த உறுப்பின் செயல்பாடு, அழகுத்தோற்றம் ஆகியவற்றில் அவ்வளவாக அக்கறை காட்டாமல், உயிரைக் காப்பாற்றினாலே போதும் என நினைத்தனர்.
ஆனால், தற்போது பயனாளிகளின் வாழ்க்கைத் தரம் (Quality of Life) மாறாமல் அறுவை சிகிச்சை செய்கிறோம். உதாரணமாக முகத்தில் அறுவை சிகிச்சை செய்யும் நபருக்கு, பேச்சு, உணவு சாப்பிடுதல், சுவாசித்தல், சுவைத்தல், ஆகியவற்றில் சிரமம் இல்லாமலும், முக அமைப்பு மற்றும் தோற்றம் மாறாமல் இருக்கவும், புற்று நோய் அறுவை சிகிச்சையோடு பிளாஸ்டிக் சர்ஜரியும் சேர்த்து செய்கிறோம். மார்பகத்தில் கட்டி நீக்கப்பட்டால் அந்த அமைப்பு மாறக் கூடாது என்று பார்க்கிறோம்.
முன்பெல்லாம் புற்று நோயாளிகளுக்கு அந்தத் துறையைச் சார்ந்த ஒரு மருத்துவர் மட்டுமே சிகிச்சை அளிப்பார். தற்போது புற்று நோய் மருத்துவர்களுடன் பிற மருத்துவர்களும் சேர்ந்து, ஒரு மருத்துவக் குழுவினரே இணைந்து சிகிச்சை அளிக்கின்றனர். முன்பெல்லாம், ஒரு மருத்துவ பயனாளிக்கு பரிந்துரைக்கப்படும் மருந்தை அவர் எடுத்துக் கொண்டு குணமடைவார். ஆனால், அதே மருந்தை, அதே போன்ற நோயினால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு கொடுக்கும்போது அவர்கள் உடலமைப்பு அந்த மருந்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அது பயன் தராது. சமயத்தில் பக்க விளைவுகளையும் உருவாக்கி விடுகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், தற்போது நாங்கள் மருத்துவப் பயனாளியின் மரபணு மாற்றத்தைக் கண்டுபிடித்து அதற்கேற்றால் போல் மருந்து கொடுத்து வியாதியைத் துல்லியமாக கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடிகிறது. மரபணு சோதனை மூலம் மிகத் துல்லியமாக சிகிச்சை கொடுக்க முடியும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை என்பது போய், ஒவ்வொருவருக்கும் ஒரு சிகிச்சை என அவரவர் உடலமைப்பிற்கேற்றவாறு அவரவர் வியாதியின் தன்மைக்கேற்றவாறு எங்களால் சிகிச்சை அளிக்க முடிகிறது. புற்று நோயால் பாதிக்கப்பட்டவரின் முழு மரபணுவையும் என்.ஜி.எஸ் என்னும் தொழிநுட்பத்தின் மூலம் கண்டறிந்து மாற்றமடைந்த மரபணுக்களுக்கேற்ற சிகிச்சையை அளிக்க முடியும். இதனை ப்ரிசிஷன் மெடிசின் என அழைக்கிறோம்.
தடுப்பூசி
ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புற்றுநோய்க்கான தடுப்பூசி என்பது ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது. ஆய்வக சோதனையில்தான் இருக்கிறது. கோவிட் தடுப்பூசி போன்று இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி என்பது புற்று நோய்கள் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி கிடையாது. இது புற்றுநோய் பாதிக்கப்பட்டவருக்கு, அவருடைய புற்று நோய் செல்களை எதிர்த்து அவருடைய நோய் எதிர்ப்பு வெள்ளையணுக்களே போராடுவதற்கு தூண்டும் தடுப்பூசி ஆகும். மலக்குடல் புற்று நோய், மெலனோமா எனப்படும் ஒரு வகை தோல் புற்றுநோய், மூளையில் வரக்கூடிய ஒரு வகை புற்று நோய் ஆகியவற்றிற்கு ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நவீன எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்ப தடுப்பூசியானது நல்ல பலன்களை தருவதற்கான சாத்தியக் கூறுகளைக் கொண்டிருக்கிறது.
கோவிட்டின்போது வைரஸ் உள்ளே புகுந்து பல மடங்கு பெருகி நம்மை அழித்து விடுகிறது. கோவிட் வைரசில் ஒரு வகை புரோட்டீன் உள்ளது. இந்த வைரஸ் புரோட்டீனை தயாரிக்கும் எம்.ஆர்.என்.ஏ எனப்படும் மரபணுவின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து நம் உடலில் தடுப்பூசியாக செலுத்தும்போது, அந்த வைரஸ் புரோட்டின் நம் உடலில் உருவாகும். உடனே நம் உடலில் அந்த புரோட்டீனை எதிர்த்து வெள்ளையணுக்கள் உருவாகி விடும். இந்த தடுப்பூசி போடப்பட்ட நபருக்கு, கோவிட் வைரஸ் தாக்கும்போது, ஏற்கெனவே நம் உடலில் தயார் நிலையில் உள்ள வெள்ளை அணுக்கள், அந்த வைரஸ் புரோட்டீனை அடையாளம் கண்டு வைரசை அழித்து விடும். இப்படித்தான் கோவிட் தடுப்பூசி செயல்பட்டது. இதே தொழில் நுட்பத்தை கையாண்டு, தற்போது ரஷ்யாவில் புற்று நோய் செல்களில் உள்ள எம்.ஆர்.என்.ஏ மரபணுவை பிரித்தெடுத்து அதனை தடுப்பூசியாக செலுத்தும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு அது வெற்றியடைந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இது அனைத்து நாடுகளிலும் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்புள்ளது. தற்போது நடந்து முடிந்த ஆராய்ச்சியில் இது மலக்குடல் புற்றுநோய் பாதிக்கப்பட்ட 24 பேருக்கு அளிக்கப்பட்டது. அவர்கள் அனைவருமே அந்த புற்று நோயிலிருந்து முழுவதும் குணமடைந்து விட்டனர். இது தான் இந்த தடுப்பூசி பற்றிய உலகளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் எல்லா புற்று நோய்களையும் சரிப்படுத்த முடியாது. மேலும் இவை ஆரம்ப காலங்களில் விலை கூடுதலாக இருக்கும். ரஷ்யாவில் தயாரிப்படும் இந்தத் தடுப்பூசி இந்தியாவுக்கு பயன்பாட்டுக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.
கேள்வி: புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?
பதில்: எடை குறைவு, தொடர்ச்சியான சோர்வு, இருமல், காய்ச்சல், உடலில் புதிய கட்டிகள் அல்லது வீக்கங்கள் ஆகியவை அடங்கும். அசாதாரண இரத்தப் போக்கு, சிறுநீர் கழிக்கும் பழக்கங்களில் மாற்றம், ஆறாத புண்கள் ஆகியவை புற்று நோயின் அறிகுறிகள்.
வெவ்வேறு வகையான புற்றுநோய்கள் வெவ்வேறு அறிகுறிகளைக் கொண்டுள்ளன. ஒரே வகையான புற்றுநோய் இருந்தாலும் புற்று நோயின் அறிகுறிகளும் நபருக்கு நபர் மாறுபடும்.இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
கேள்வி: ரேடியேஷன் சிகிச்சை பற்றி?
பதில்: முன்பு ரேடியோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்படும்போது நோய் பாதிக்கப்படாத மற்ற உறுப்புகளும் கதிர் வீச்சை அபாயத்தால் பாதிக்கப்படும் நிலை இருந்தது. இப்போது அது துல்லியமாக கண்டறிய வசதி செய்யப்பட்டுள்ளதால் மற்ற பகுதி பாதிக்கப்படாது. இதனை அய்.எம்.ஆர்.டி சிகிச்சை என அழைக்கிறோம்.
கேள்வி: புற்று நோயால் பாதிக்கப்பட்டு 4ஆவது கட்ட நிலையில் உள்ளவர்கள் வலி தாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அவர்கள் வலியைப் போக்க நவீன மருத்துவத்தில் வழி உண்டா?
பதில்: ரேடியாலஜி நிபுணர்கள் மூலம் நோயினால் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ அந்தப் பகுதியில் மட்டும் வலியை மரத்துப் போகச் செய்யும் அளவுக்கு தற்போது சிகிச்சையளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனைகளில் (Pain Clinic) உள்ளது. மருத்துவப் பயனாளிக்கு உயிர் போகிற அளவுக்கு வலியால் துடிக்கவிட மாட்டோம். சி.டி.ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து வலி உண்டாக்கும் நரம்பைக் கண்டுபிடித்து அதை மட்டுமே செயலிழக்க செய்து மருத்துவ சிகிச்சையளிக்கிறோம்.
கேள்வி: தற்போது கேன்சர் அதிகமாக பாதிக்கும் உறுப்பு எது?
பதில்: தற்போது உலக அளவில் ஆண்கள் நுரையீரலில் கேன்சரால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுகிறார்கள். இதற்கு புகைப்பழக்கம் ஒரு முக்கிய காரணம், பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
கேள்வி: பரம்பரை ரீதியாக புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு உள்ளதா?
பதில்: மார்பக புற்றுநோய் உள்ளவர்கள் 100க்கு 5 சதவீதத்தினருக்கு மட்டும் இந்த பரம்பரை ரீதியான புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. வியாதியுள்ளவர்கள் குடும்பத்தினரில், யாருக்கு வரக்கூடும் என்பதை மரபணு சோதனை மூலம் கண்டறிந்து எச்சரிக்கையாக இருக்கலாம்.
கேள்வி: புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே?
பதில்: மரபணு மாற்றம் தான் இதற்கு காரணம். சிறு வயதில் வரக்கூடிய ஒரு சில வைரஸ் கிருமிகள் புற்றுநோயை உருவாக்கலாம். உணவுப் பழக்க வழக்கமும் ஒரு காரணம். அதிக கொழுப்புச்சத்து் உள்ள உணவுகள், எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை உள்ள குளிர் பானங்கள் ஆகியவை புற்று நோய் உருவாக்க வாய்ப்புள்ளவை. எனவே சிறு வயதிலிருந்தே இவற்றை அதிகம் பயன்படுத்தும் வழக்கத்தை தவிர்க்க வேண்டும். புற்று நோய் வந்தால், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் பயப்படத் தேவையில்லை.
கேள்வி: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயுட் காலத்தை அதிகரிக்க முடியுமா?
பதில்: முன்பு இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 5 ஆண்டுகள் வரை உயிர்வாழ்வதையே குணமடைந்ததாக கருதினோம். ஆனால், தற்போது நவீன மருத்துவத்தின் மூலம் நோய் முற்றிலும் குணமாகவும், பாதிக்கப்பட்டவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழவும் வாய்ப்பு உள்ளது. பல வகை புற்று நோய்களை முற்றிய நிலையில் கூட தொடர் சிகிச்சையின் மூலம் சர்க்கரை வியாதி, இரத்தக்கொதிப்பு ஆகிய நோய்களைப்போல் ஒரு நீண்ட கால வியாதியாக மாற்றி தொடர் சிகிச்சை மூலம் அதிக காலம் பிரச்சினை இல்லாமல் வாழ வைக்க முடியும்.
.png)
21 hours ago
16






English (US) ·