உட்லீயில் உள்ள ஒரு வீவக வெற்றுத்தளத்தில் இளம் பெண் ஒருவர், மின்சிகரெட் புகைப்பதைக் காட்டும் காணொளி வெளியானதை அடுத்து, மக்களிடையே அக்கறைகள் எழுந்துள்ளன. - படம்: இஸ்டகிராம்/தஎஸ்ஜிடெய்லி
சிங்கப்பூரின் உட்லீ பகுதியில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்கின் வெற்றுத் தளத்தில், இளம்பெண் ஒருவர் மின்சிகரெட் பிடிப்பது போன்ற காணொளி, சமூக ஊடகத் தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உட்லீ லிங்க் புளோக் 206D வெற்றுத்தளத்தில் நான்கு சிறுவர்கள் ஒன்றுகூடியிருந்த வேளையில், இச்சம்பவம் நடைபெற்றதாக சமூக ஊடகப் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இணையத்தில் பரவி வரும் அந்தக் காணொளியில், வெளிர் நீல நிறச் சட்டை அணிந்த சிறுமி ஒருவர் மின்சிகரெட்டை உறிஞ்சி, அதன் அடர்ந்த புகையைக் காற்றில் ஊதியவாறு கைப்பேசி கேமராவில் அந்தக் காட்சியைப் பதிவேற்றம் செய்கிறார். அதே வேளையில், அடர் நீல நிறச் சட்டை அணிந்த மற்றொரு சிறுவன் அருகில் ஏதோ ஒரு பொருளைப் பிடித்துத் தீப்பற்ற வைப்பது போன்று அக்காணொளியில் பதிவாகியுள்ளது.
இக்காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, அதில் காணப்படும் சிறுமி ஃபர்ஸ்ட் தோ பாயோ தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவி என்று இணையவாசிகள் சிலர் கருத்துப் பகுதியில் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தங்களுக்குத் தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பாகத் தகுந்த உறுதியான நடைமுறைகளைப் பின்பற்றித் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் பள்ளி நிர்வாகம் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணித்திட்டக் கருத்தரங்கில் ஜூலை 22ஆம் தேதியன்று பேசிய உள்துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், 2025ஆம் ஆண்டில் போதைப்பொருள் பயன்பாட்டிற்காகக் கைது செய்யப்பட்ட மிக இளைய நபர் 12 வயதுடையவர் என்று கூறினார்.
மேலும், 2025ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட புதிய போதைப்பொருள் பயன்படுத்துபவர்களில் பாதி பேர் 30 வயதுக்குக் குறைவானவர்கள் என்றும் திருவாட்டி சிம் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் சிறுவர்கள் மற்றும் இளையர்களிடையே மின்சிகரெட் பயன்பாடு அதிகரிப்பது குறித்துப் பொதுமக்களிடையே கவலைகள் அதிகரித்துள்ளன. சிங்கப்பூர் சட்டப்படி மின்சிகரெட்டுகளை வாங்குவது, பயன்படுத்துவது அல்லது கைவசம் வைத்திருப்பது கடுமையான சட்டவிரோதச் செயலாகும்.
இதனைத் தடுக்கும் பொருட்டு அரசாங்கத்தால் சட்டம் கடுமையாக்கப்பட்டு, மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகை 2,000 வெள்ளியிலிருந்து 10,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.
.png)






English (US) ·