லக்கி பிளாசா உணவங்காடியில் எலி நடமாட்டம்; சிங்கப்பூர் உணவு அமைப்பு விசாரணை

1 hour ago 17

06e17ee3-a49d-4304-ab6b-d038816cb664

உணவு மேசை மீது தட்டில் இருந்த உணவை எலி முகர்ந்து பார்த்துவிட்டு ஓடியதாகக் கூறப்பட்டது. - காணொளிப் படம்: UANDURFADER/REDDIT

ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள லக்கி பிளாசா கடைத்தொகுதி உணவங்காடி மேசையில் எலி காணப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) தெரிவித்துள்ளது.

ரெடிட் (Reddit) சமூக வலைத்தளத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி இரவு பதிவேற்றப்பட்ட காணொளியில், அந்த எலி மேசை மீதிருந்த உணவுத் தட்டை முகர்ந்து பார்த்த பிறகு வேகமாக ஓடுவது பதிவாகியுள்ளது. அந்த மேசையில் அமர்ந்திருந்த ஆடவர் உடனடியாக எழுந்து செல்வதையும், அருகில் இருந்த ஒரு பெண் தனது உடைமைகளை அவசரமாக எடுத்துக்கொள்வதையும் காண முடிகிறது. பின்னர் அங்கு வந்த மற்றோர் ஆடவர், ஒரு துணியைப் பயன்படுத்தி அந்த எலியைப் பிடித்து மேசையிலிருந்து அகற்றினார்.

இந்தச் சம்பவம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் உணவு அமைப்பு, உணவுப் பாதுகாப்பைத் தீவிரமாகக் கருதுவதாகவும் உணவுப் பாதுகாப்பு நடைமுறைகளில் குறைபாடு இருப்பதாக அளிக்கப்படும் அனைத்துப் புகார்களையும் விசாரிப்பதாகவும் தெரிவித்தது.

போதிய ஆதாரங்கள் கிடைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்று அது கூறியது.

நிர்வாகத்தின் விளக்கம்

இச்சம்பவம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த ‘ஏஷியன் ஃபுட் மால்’ நிர்வாகம், சம்பவத்தைத் தொடர்ந்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தது. “அந்த எலியும், பாதிக்கப்பட்ட உணவும் உடனடியாக அகற்றப்பட்டன. கடை ஊழியர் வாடிக்கையாளருக்குப் புதிய உணவை வழங்கினார். அந்தப் பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டதுடன் கிருமிநீக்கப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன,” என்று அது கூறியது.

பின்னர், வளாகம் முழுவதும் விரிவான சோதனை நடத்தி, துப்புரவுப் பணிகளும் கிருமிநீக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய நிர்வாகம் தங்கள் வளாகத்தில் இத்தகைய சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டது.

உணவு அமைப்பின் அறிவுறுத்தல்

ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அமைப்பு அமல்படுத்தினாலும், உணவங்காடி உரிமையாளர்கள், சிறந்த உணவுச் சுகாதாரம், தயாரிப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பங்களிக்க வேண்டும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்த கூடுதல் தகவல்களைப் பெற ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம், லக்கி பிளாசா கடைத்தொகுதியின் நிர்வாக அலுவலகத்தைத் தொடர்பு கொண்டுள்ளது.

Read Entire Article