நல்லகண்ணு மறைவு குறித்து நடிகர் ஆரி உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
Published:Just NowUpdated:Just Now

தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். இவர் 'நெடுஞ்சாலை, தரணி, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம், நெஞ்சுக்கு நீதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றிபெற்று மேலும் பிரபலமானார். விஜய் மில்டன் இயக்கத்தில் 'கோலிசோடா 3' படத்திலும் நடித்துள்ளார்.
இதற்கிடையில், எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபோர்த் ப்ளோர்' என்ற படத்தில் நடித்துள்ளார். மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தில் தீப்ஷிகா, பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், நேற்று திரைப்படக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
ஃபோர்த் ப்ளோர்
அப்போது பேசிய நடிகர் ஆரி, ``திரைப்படம் குறித்துப் பேசுவதற்கு முன்பாக, இன்று மறைந்த ஐயா நல்லகண்ணு அவர்களைப் பற்றிப் பேசுவதே முறை என நினைக்கிறேன்.
நூறு ஆண்டுகள் நிறைவு செய்த அவரது இந்த நீண்ட வாழ்க்கைப் பயணத்தில், தமிழ்ச் சமூகத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாதது.
அரசியலில் ஒரு மனிதர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர் அவர்.
இதுவரை நாம் காமராஜர், அண்ணா போன்ற தலைவர்களை மட்டுமே கொண்டாடி வந்தோம். இனி வரும் காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் காமராஜர், அண்ணா போன்ற பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்று விரும்புவது போல, ஐயா நல்லகண்ணு போன்ற ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் விருப்பமாகும்.
அவர் தனது இளமைக் காலத்தில் 25 ஆண்டுகள் விவசாயச் சங்கத் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். அதன் பிறகு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து தன் பணிகளைத் தொடர்ந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது எனக்குப் பெரும் பிரமிப்பும், ஆச்சரியமும் ஏற்பட்டது.

நல்லகண்ணு
ஒரு கொடுமையான சாதிக்கலவரத்தில் தனது மாமனாரைப் பலிகொடுத்தவர் அவர். அந்த இழப்பிற்குப் பிறகு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையைக் கூட தனக்கென வைத்துக் கொள்ளாமல், அந்த இரு சமூகத்தைச் சார்ந்த குழந்தைகளின் கல்விக்காக வழங்கிய அந்தப் பெருந்தன்மையை இனி வரும் தலைவர்களிடம் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.
தன் வாழ்நாள் முழுவதும் எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவராக இந்தச் சமூகத்திற்காக வாழ்ந்து இன்று மறைந்திருக்கிறார். அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, நாம் அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திவிட்டு, பிறகு மற்ற விஷயங்களைப் பேசுவது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்" எனக் கூறி, மௌன அஞ்சலி செலுத்தினார்.
.png)





English (US) ·