“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் இன்றைய நிலை இதுதான்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

1 hour ago 14

Last Updated:Feb 10, 2026 5:19 PM IST

“எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி பார்க்காமலேயே மருத்துவக்கல்லூரி படிப்பை முடித்து வெளியில் செல்பவர்களாக ஒரு Batch வர இருக்கிறது”

News18
News18

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், ரூ.8 கோடி மதிப்பீட்டிலான புதிய கேத்லேப் கருவியினை இன்று (10.02.2026) முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் குறித்து பேசினார்.

அவர் கூறுகையில், “மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முடியும் தருவாயில் இருப்பதாக சொல்ல முடியாது. ஒரு பிளாக் மட்டுமே கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதுவும்கூட எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணியினை விரைவுபடுத்திட வேண்டும் என்று முதலமைச்சர் சொல்லி என்னையும், இத்துறையின் செயலாளர் அவர்களையும் ஜப்பானுக்கு அனுப்பி JICA நிறுவனத்தின் துணைத் தலைவர் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்ததால்தான். நாங்கள் போனது மட்டுமல்ல, டெல்லியில் இருக்கின்ற எய்ம்ஸ் அதிகாரியையும் உடன் அழைத்துச் சென்றோம்.

மதுரை எய்ம்ஸ்

ஜப்பான் பன்னோக்கு கூட்டுறவு முகமை (JICA) நிறுவனத்திடம்தான் ஒன்றிய அரசு இதற்கான கடனைக் கேட்டு இருந்தது. அதற்கான நிதி நீண்ட நாட்களாக விடுவிக்கப்படாமல் இருந்த நிலையில், முதலமைச்சர் நேரிடையாக ஜப்பானுக்குச் சென்று அந்தக் கடனை விடுவிக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தச் சொன்னார்கள். அந்தவகையில் நானும் இத்துறையின் செயலாளர், எய்ம்ஸ் மருத்துவமனை ஒருங்கிணைப்பு அலுவலர் அனைவரும் சென்று JICA துணைத் தலைவரிடம் கேட்டோம். அப்படி கேட்டதற்குப் பிறகுதான் அந்தத் தொகை விடுவிக்கப்பட்டது. தற்போது கட்டிடப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முழுமையாக பணிகள் முடிவடைவதற்கு 2028 இறுதி ஆகும் என்று அன்றே ஜப்பான் JICA நிறுவனம் சொன்னது. இருப்பினும் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 50 பேர் சேர்க்கைக்கு முதலமைச்சர் ஒத்துழைப்பு தந்து இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர்களை சேர்க்க வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 50 மாணவர்கள் என்கின்ற வகையில் கடந்த 4 ஆண்டுகளாக அம்மாணவர்கள் நமது மாநில அரசு மருத்துவக்கல்லூரியில்தான் பயின்று வருகிறார்கள். எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி பார்க்காமலேயே மருத்துவக்கல்லூரி படிப்பை முடித்து வெளியில் செல்பவர்களாக ஒரு Batch வர இருக்கிறது. இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனையின் இன்றைய நிலை” என்றார்.

Read Entire Article